ஒடிசாவில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது..

ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது.
சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில் மற்றும் ஷாலிமார் – சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில் பாஹாநாகா பஜார் ரயில்நிலையம் அருகே  ஹவுரா ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து தகவலறிந்து தீயணைப்பு துறையினர், மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ஒடிஷா ரயில் விபத்து நடந்த இடத்தில் இருந்து 120க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என ஒடிஷா தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது. 15க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என தீயணைப்புத் துறை தலைவர் சுதான் ஷூ சாரங்கி தகவல் தெரிவித்துள்ளார். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவிலும் தொடர்வதாக ஒடிசா தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு இடையே தமிழகத்தில் இருந்து அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள், ஒடிஷாவிற்கு சென்று மீட்பு  பணியை துரிதப்படுத்த உள்ளனர்..

விபத்துக்குள்ளான இடத்தில் இரண்டு பயணிகள் ரயில்களும் தமிழக ரயில் நிலையங்கள் வழியாக செல்லும் என்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.கோரமண்டல் ரயிலில் சென்னை வர 800க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

கோரமண்டல்  ரயிலின் பி2, பி3 பி4, பி5, பி6, பி7, பி8, பி9 பெட்டிகளும் தடம் புரண்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என ஒடிசா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இதனிடையே ரயில் விபத்துக்கான மூல காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியமானது என அஸ்வினி வைஷ்ணவ்  தெரிவித்துள்ளார். ரயில்விபத்து  எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டறிய உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது..