கானா நாட்டைச் சேர்ந்த எபோ ஏனோக் எனும் நபர், கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி உலகம் அழியப்போவதாகவும், மகா பிரளயம் ஏற்படும் என்றும் விடுத்திருந்த எச்சரிக்கை பொய்யானதை அடுத்து, தற்போது அந்த அழிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறிப் புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.
உலகம் முழுவதும் 3 ஆண்டுகளுக்குத் தொடர் மழை பெய்து வெள்ளம் ஏற்படும் என்றும், அதிலிருந்து தப்பிக்கத் தான் கட்டியுள்ள மரக் கப்பல்களில் ஏறுமாறும் அவர் தனது ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டார். இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொத்துகளை விற்று அவரிடம் பணத்தைக் கொடுத்ததுடன், கப்பல்கள் இருக்கும் இடத்திற்கும் திரண்டு வந்தனர்.
ஆனால், குறிப்பிட்ட தேதியில் எதுவும் நடக்காததால், மக்கள் தங்குவதற்கு இன்னும் கூடுதல் கப்பல்கள் தேவைப்படுவதால் அழிவை ஒரு சில காலத்திற்குப் தள்ளி வைக்குமாறு கடவுளிடம் தான் வேண்டியதாகவும், அதற்கு இறைவன் சம்மதம் தெரிவித்துத் தமக்குக் கூடுதல் அவகாசம் கொடுத்திருப்பதாகவும் ஏனோக் தற்போது கூறியுள்ளார்.
View this post on Instagram
இதற்கிடையில், கப்பல் கட்டும் பணிக்காகத் தனது ஆதரவாளர்கள் வழங்கிய பணத்தைக் கொண்டு எபோ ஏனோக் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் ஒன்றை வாங்கியதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. லிபீரியாவிலிருந்து இவரை நம்பி வந்த நபர் ஒருவர் தற்போது உணவிற்கும் தங்குமிடத்திற்கும் வழியின்றி எல்மினாவில் தவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மக்களைப் பயமுறுத்திப் பணம் பறிப்பதற்காகவே இத்தகைய போலித் தீர்க்கதரிசனங்கள் கூறப்படுவதாகச் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், தான் யாரிடமும் டிக்கெட் விற்கவில்லை என்றும், மக்கள் வீட்டிலேயே இருந்து கிறிஸ்துமஸைக் கொண்டாடுமாறும் அவர் தற்போது ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
