பிரபல சமூக வலைதள செயலியான டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பாவெல் துரோவ், குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டு உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் துரோவ், ஆரம்பத்தில் ‘VK’ என்ற சமூக வலைதளத்தை உருவாக்கினார். அது ரஷ்யாவில் ஃபேஸ்புக் போன்ற பிரபலத்தை பெற்றது.
ஆனால், பயனர்களின் தகவல்களை அரசுக்கு வழங்க மறுத்ததன் காரணமாக, அந்த நிறுவனத்திலிருந்து அவர் விலக நேரிட்டது. இதனைத் தொடர்ந்து, டெலிகிராம் செயலியை தொடங்கினார். டெலிகிராம் தொடங்கியபோதே, “இந்த செயலி முழுமையாக பாதுகாப்பாக இருக்கும். பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் யாருக்கும் வழங்கப்படாது” என பாவெல் துரோவ் உறுதியாக அறிவித்தார். அரசுகள் அழுத்தம் கொடுத்தாலும், பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
தற்போது துபாயில் டெலிகிராம் தலைமையகத்தை அமைத்து நடத்தி வரும் பாவெல் துரோவ், ரஷ்யாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். 41 வயதான அவரது சொத்து மதிப்பு ரூ.1.52 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில், எளிய வாழ்க்கை முறையையும், நிரந்தரமாக ஒரே நாட்டில் தங்காமல் பல நாடுகளில் பயணம் செய்து வாழ்வதையும் அவர் பின்பற்றி வருகிறார். பணம் மற்றும் அதிகாரத்தை விட சுதந்திரமே முக்கியம் என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
பாவெல் துரோவுக்கு தற்போது மூன்று மனைவிகளும், ஆறு குழந்தைகளும் உள்ளனர். மேலும், விந்தணு தானம் மூலம் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாக அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த அனைத்து குழந்தைகளுக்கும் தன்னுடைய சொத்தில் சம பங்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதற்காக, உயில் எழுதிய நாளிலிருந்து 30 ஆண்டுகள் கழித்து, அதாவது 2055-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி, அவரது சொத்துக்கள் 106 குழந்தைகளுக்கு சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குழந்தை பிறப்பை அதிகரிக்கும் நோக்கில் புதிய அறிவிப்பு ஒன்றை பாவெல் துரோவ் வெளியிட்டுள்ளார். அதன்படி, தனது விந்தணுவை பயன்படுத்தி செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு, முழு மருத்துவச் செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும், அவ்வாறு குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு தன்னுடைய சொத்திலும் பங்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்
இந்த சலுகை 37 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பொருந்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மேலும் “உலகளவில் ஆண்களின் விந்தணு தரம் குறைந்து வருகிறது. இதனை சமூகப் பொறுப்பாகக் கருதி, இந்த தானத்தை தொடங்கியுள்ளேன்” என தெரிவித்துள்ளார். பாவெல் துரோவின் இந்த அறிவிப்பு, சமூக வலைதளங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
