கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சிவாங்க் அவஸ்தி (வயது 20) கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (PhD) பயின்று வந்தார்.
இந்நிலையில், டொராண்டோ பல்கலைக்கழகத்தின் வளாகம் அருகே உள்ள பகுதியில், அவரது உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர் உயிரிழந்த இடத்தில் சிலரிடையே தகராறு ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் மர்ம நபர்கள் சிவாங்க் அவஸ்தியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்துஇந்தியத் துணைத் தூதரகம் தனது எக்ஸ் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளது.
அதில், டொராண்டோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ வளாகம் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் சிவாங்க் அவஸ்தி உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த வேதனை அடைகிறோம். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். மேலும், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் சமீப காலமாக இந்தியர்கள் தொடர்பான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு டொராண்டோவில் 30 வயதான இந்திய வம்சாவளி பெண் ஹிமான்ஷி குரானா அவரது ஆண் நண்பரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ள சம்பவம், அங்குள்ள இந்திய சமூகத்தினரிடையே கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
