கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி உக்ரைன் மக்களுக்கு உரையாற்றிய அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அவரது முடிவுக்காக பிரார்த்தனை செய்ததாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உரையின்போது, உக்ரைன் மக்களிடையே நிலவும் ஒரு பழங்கால நாட்டுப்புற நம்பிக்கையை குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, “கிறிஸ்துமஸ் இரவில் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும். அந்த நேரத்தில் மனதார கேட்கப்படும் விருப்பம் நிறைவேறும் என்று நம் மக்கள் நம்புகிறார்கள். இன்று நாம் அனைவரும் ஒரே கனவையே காண்கிறோம்.

 

அவர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே அனைவரின் ஒரே விருப்பம். இதற்காக ஒவ்வொரு உக்ரேனியரும் பிரார்த்தனை செய்கிறார்” என்று தெரிவித்தார். இந்த உரை, புதினை குறித்தே அவர் குறிப்பிட்டதாக அரசியல் வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன. தொடர்ந்து பேசிய ஜெலென்ஸ்கி,
“நாம் கடவுளிடம் பெரிய ஒன்றையே கேட்கிறோம். உக்ரைனுக்கு அமைதியை கேட்கிறோம். அதற்காக போராடுகிறோம், அதற்காக பிரார்த்தனை செய்கிறோம். அமைதிக்கு நாங்கள் தகுதியானவர்கள்” என்றார்.

இதற்கிடையே, கிறிஸ்துமஸ் ஈவ் மற்றும் கிறிஸ்துமஸ் நாளிலும் ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கடுமையான தாக்குதல்களை நடத்தியதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த தாக்குதல்களில் குறைந்தது 3 பேர் உயிரிழந்ததுடன், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் நாளன்று மட்டும் ரஷ்யா 131 ட்ரோன்களை உக்ரைன் மீது வீசியதாக கூறப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டாலும், 22 ட்ரோன்கள் 15 பகுதிகளில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தின.

இதுகுறித்து ஜெலென்ஸ்கி கூறுகையில், “கிறிஸ்துமஸ் ஈவ் அன்று ரஷ்யர்கள் தாங்கள் உண்மையில் யார் என்பதை மீண்டும் காட்டிவிட்டனர். கடுமையான ஷெல் தாக்குதல்கள், நூற்றுக்கணக்கான ‘ஷாஹித்’ ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், கின்ஷால் தாக்குதல்கள் என அனைத்தும் பயன்படுத்தப்பட்டன. நாத்திகர்கள் இப்படித்தான் தாக்குவார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழில்துறைப் பகுதிகளில் இருந்து தங்களது படைகளை திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார். ஆனால், இதற்கு மாஸ்கோவும் அதேபோல் பின்வாங்க வேண்டும் என்றும், அந்தப் பகுதி பின்னர் சர்வதேச படைகளின் கண்காணிப்பில் ராணுவமற்ற மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்