அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிக இணைய உள்ளதாகவும், அதற்கு வெறும் 6 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பரவிய தகவல் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்தச் செய்தியைக் கேட்டு கடும் ஆவேசமடைந்தார். “எங்களுக்கு வெறும் 6 சீட் தான் என்று பொய் தகவல் பரப்பியவர்களுக்கு இனி அழிவுகாலம் தொடங்கிவிட்டது” என்று சாபம் விட்டதுடன்,

அதிகாரப்பூர்வமாகத் தலைமை அறிவிக்கும் வரை இதுபோன்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
​எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெற உள்ள தேமுதிக மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று பிரேமலதா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேமுதிகவின் பலத்தைக் குறைத்து மதிப்பிடும் வகையில் 6 இடங்கள் என்ற தகவல் வெளியானதால், கட்சித் தொண்டர்களின் மனநிலை பாதிக்கப்படும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். இன்னும் கூட்டணி குறித்து எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்கப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் உலவும் இத்தகைய செய்திகள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.