பொதுவாக பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்காகக் காத்திருக்கும் மக்கள், நேரத்தைக் கடத்தத் தங்கள் கைபேசிகளில் மூழ்கியிருப்பதே இன்றைய வழக்கமான காட்சியாக உள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக சீனாவில் பள்ளி மாணவி ஒருவர், பேருந்து வரும் வரை தனக்குக் கிடைத்த இடைவெளியைத் தனது தற்காப்புக் கலைத் திறனை மெருகேற்றப் பயன்படுத்திக் கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் குறைந்த பேருந்து நிறுத்தத்தின் மின்விளக்கு வெளிச்சத்தில், அந்த மாணவி எவ்வித தயக்கமுமின்றி மிகுந்த தன்னம்பிக்கையுடன் தற்காப்புக் கலைப் பயிற்சிகளை மேற்கொள்கிறார். காற்றில் மின்னல் வேகத்தில் அவர் மேற்கொள்ளும் உதைகளும், கைகளின் அசைவுகளும் மிகுந்த துல்லியத்துடன் இருப்பதை அந்த வீடியோ படம் பிடித்துக் காட்டுகிறது.

சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த  வீடியோ, உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  இக்காணொளியைப் பார்த்த இணையதளப் பயனர்கள், அந்தச் சிறுமியின் அர்ப்பணிப்பையும் ஒழுக்கத்தையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
<a href=”http://

“>
“தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி என்பது வெறும் பயிற்சியால் மட்டும் வருவதல்ல, அது ஒருவரின் கலை மீதான தீராத காதலால் விளைவது” எனப் பதிவிடப்பட்டுள்ள இந்தக் காணொளிக்குக் கருத்து தெரிவித்துள்ள பலரும், மேற்கத்திய நாடுகளின் உயரிய தரங்களுக்கு நிகராக இந்தச் சிறுமியின் வேகம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

நேரத்தை வீணடிக்காமல் தனது திறமையை மெருகேற்றும் இந்தச் சிறுமியின் முயற்சி, இன்றைய தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.