குருகிராம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர், மாதம் 25,000 ரூபாய் சம்பளம் கிடைத்து வந்த ஒரு நிலையான 9 to 5 கார்ப்பரேட் வேலையைத் துறந்துவிட்டு, முழுநேர கேப் ஓட்டுநராக மாறிய ஒரு இளைஞனின் வியக்கத்தக்க வருமானம் குறித்த செய்திதான் இது.

மேலும்  ‘ஜிப் எலக்ட்ரிக்’ என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆகாஷ் குப்தா, தற்செயலாக ஒரு கேப் ஓட்டுநருடன் உரையாடியபோது இந்த ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது. அந்த இளைஞர் தன்னிடம் பேசிய சிஇஓ-விடம், “முன்பு நான் ஒரு நிறுவனத்தில் மாதம் 25,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வந்தேன்.

ஆனால், அந்த வேலையில் எனக்குப் போதிய மனநிறைவோ, போதிய வருமானமோ கிடைக்கவில்லை. இதனால், அந்த வேலையை விட்டுவிட்டு மொபைல் ஆப் மூலமாக கேப் ஓட்டத் தொடங்கினேன். இப்போது நான் கடுமையாக உழைத்து, மாதம் கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அதோடு இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த சிஇஓ ஆகாஷ் குப்தா, அந்த இளைஞரின் கடின உழைப்பைப் பாராட்டி இந்தத் தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார், இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுயதொழில் மற்றும் கடின உழைப்பின் மூலம் குறுகிய காலத்தில் அதிகப் பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு இந்த இளைஞர் ஒரு சிறந்த உதாரணம் என்று ஒரு தரப்பினர் அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர் ஒரு நிலையான வேலை என்பது வழக்கமான வருமானம், சமூகப் பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு போன்ற இதர சலுகைகளைத் தரும் என்றும், தற்காலிகப் பணிகளில் நீண்ட காலத்திற்கு ஒரே மாதிரியான வருமான உத்தரவாதம் இருக்காது என்றும் மாற்று கருத்துக்களை முன்வைத்து விவாதித்து வருகின்றனர். எது எப்படியாயினும், முறையான உழைப்பும், சரியான தளமும் அமைந்தால் சாதாரண கேப் ஓட்டுநராக இருந்தாலும் லட்சங்களில் சம்பாதிக்க முடியும் என்பதை அந்த இளைஞன் நிரூபித்துக் காட்டியுள்ளார்.