ஒடிசாவை சேர்ந்த சமூக சேவகி மற்றும் ஆராய்ச்சியாளரான இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 10-ஆம் தேதி தேதி டெல்லி சென்றுள்ளார். இரவு சராய் காலே கான் பகுதியில் சாலையோரம் உள்ள கடை முன்பு அமர்ந்திருந்தார். இதனை பார்த்த கடையின் வியாபாரி பர்மோத் பாபு மற்றும் அந்த பெண்ணின் அருகே அமர்ந்திருந்த ஊனமுற்ற பிச்சைக்காரர் முகமது ஷம்சுல் ஆகியோர் இளம்பெண்ணை நோட்டமிட்டனர். பிறகு அந்த பெண்ணிடம் பேச்சுக்கொடுத்து அருகே இருந்த மறைவான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் ஆட்டோவில் வந்த பிரபு மஹ்தோ அந்த பெண்ணை காப்பாற்றுவது போல் நடித்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அப்பகுதியில் உள்ள சாலையில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து மறுநாள் காலையில் பகுதி வழியாக வந்த கடற்படை அதிகாரி ஒருவர் இளம்பெண் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து 10 தனிப்படை அமைத்து போலீசார் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை வலைவீசி தேடி வந்தனர். அப்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முதலில் ஆட்டோ டிரைவர் பிரபு மஹ்தோவை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கடையின் வியாபாரி பர்மோத் பாபு, பிச்சைக்காரர் முகமது ஷம்சுல் ஆகியோரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.