நாடு முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தூரைச் சேர்ந்த ராஜா (29) மற்றும் சோனம் (24) கடந்த மே 11 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டு, தேனிலவுக்காக மேகாலயா சென்றிருந்தனர். திருமணம் ஆகி வெறும் 12 நாள்களுக்குள் ராஜா மர்மமான முறையில் காணாமல் போனார்.
மே 23 அன்று ஹோம்ஸ்டேயில் இருந்து வெளியேறிய ராஜா, சில மணி நேரத்துக்குள் காணாமல் போனார். தொடர்ந்து, ஜூன் 2 ஆம் தேதி அவரது சடலம் மேகாலயா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இது சாதாரண மரணம் இல்லை என உறுதி செய்த போலீசார், வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரது மனைவி சோனம், ஜூன் 8ஆம் தேதி உத்தரபிரதேசம் காஜிபூரில் சரணடைந்தார்.
விசாரணையின் போது, சோனம் மிகுந்த அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டார். தனது முன்னாள் காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து, திருமணத்துக்கு பிறகு ராஜாவை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதை அமலாக்கியதாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, குற்றத்தில் உதவியவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு (SIT) சோஹ்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 790 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. முழுமையாக ஆதாரங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகையில், சோனத்தின் சதித் திட்டம், அதன் செயல் விளைவுகள் மற்றும் மற்ற குற்றவாளிகளின் பங்கு தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கின் அடுத்த கட்டம் நீதிமன்ற விசாரணை நோக்கி நகர்ந்து வருகிறது.
