உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்ட தௌராலா பகுதியிலுள்ள கிராமங்களில் ‘நிர்வாண கும்பல்’ என அழைக்கப்படும் மர்மக் குழுவின் அட்டூழியத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

விவசாய நிலங்களில் இருந்து நிர்வாணமாக வெளிப்படும் நபர்கள், தனியாக செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாக வயலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களில் நான்கு சம்பவங்கள் நடந்ததாகவும், சமீபத்தில் பாராலா கிராமத்தில் வேலைக்கு சென்ற பெண் ஒருவரை 2 பேர் சூழ்ந்தபோதும் அவர் சத்தம் போட்டதால் தப்பிவிட்டதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அவமானத்தால் முன்பு இந்தச் சம்பவங்கள் வெளியே சொல்லப்படவில்லையெனவும் கிராமவாசிகள் தெரிவித்தனர்.

பெண்கள் வெளியே வரவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாராலா கிராமத் தலைவர் ராஜேந்திர குமார் தெரிவித்துள்ளார். இதனால், குற்றவாளிகளைப் பிடித்து மக்களின் அச்சத்தை போக்க கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டதுடன், டிரோன்களின் உதவியுடன் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.