காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் 67,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு தரப்பும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டுள்ளன.

இதனால் இஸ்ரேல் படைகள் காசாவிலிருந்து வெளியேறி வருகின்றன. ஹமாஸ் தரப்பு தங்கள் வசம் இருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவித்துள்ளது. மேலும், கொல்லப்பட்ட மீதமுள்ள பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. காசாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஹமாஸ் முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம்சாட்டி 6 பாலஸ்தீனியர்களை ஹமாஸ் ஆயுதக் குழுவினர் பொதுவெளியில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

காசா நகரில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாகவே, தங்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 30-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை ஹமாஸ் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.