சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டி சேக்கிழார் தெருவைச் சேர்ந்த தங்கம் என்பவர் தனது மனைவியால் அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாற்பது வயதான தங்கம் மற்றும் அவரது மனைவி பத்மா ஆகிய இருவரும் 17 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தத் தம்பதியினருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் தனது கணவரின் உறவினர் ஒருவருடன் பத்மா அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த தங்கம் தினமும் மது குடித்துவிட்டு வந்து பத்மாவை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பும் இதே காரணத்திற்காக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கணவரின் தொடர் சித்திரவதையால் கடும் மனவேதனையில் இருந்த பத்மா ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார். அன்று இரவு தங்கம் மது போதையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது அங்கு இருந்த பாரமான அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கிப் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தங்கம் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்துத் தகவல் அறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர் விரைந்து வந்து தங்கத்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற பத்மாவைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
