மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக அரசுடனான கூட்டணி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “திமுக மீது எங்களுக்கும் விமர்சனங்கள் உண்டு;
கடந்த 5 ஆண்டுகளில் விசிக நடத்திய போராட்டங்களைப் போல் வேறு எந்தக் கட்சியும் திமுக அரசை எதிர்த்து நடத்தியிருக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, மதுரையில் ஒருமுறை தான் அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியபோது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னிடம், “ஏன் பொதுவெளியில் இப்படி வெளிப்படையாகப் பேசுகிறீர்கள்?” எனத் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டதாகத் திருமாவளவன் மேடையிலேயே தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய அரசியல் மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், மதுரையைச் சனாதன நகரமாக மாற்றச் சில சக்திகள் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். “எனக்குப் பதவி ஆசையோ, பொருள் ஆசையோ கிடையாது; இடதுசாரிகளுடன் எந்த ஆதாயமுமின்றி இணைந்திருக்கிறோம்” என்று கூறிய அவர், உண்மையான தமிழ் தேசியம் என்பது இந்து ராஷ்டிரம் அமைப்பதைத் தடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கூட்டணி குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தேர்தல் அரசியலில் இயக்கத்தின் வலிமையையும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், கொள்கை சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
