அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு அக்கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கியப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே. செல்வம், தனது சித்தப்பாவின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய்யின் தவெக கட்சியில் தாத்தா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகவே செங்கோட்டையன் அங்கு சென்றுள்ளார்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். மேலும், செங்கோட்டையனால் அவரது சொந்தத் தொகுதியான கோபிச்செட்டிப்பாளையத்திலோ அல்லது ஈரோடு மாவட்டத்திலோ 20,000 வாக்குகளைக் கூட இனிப் பெற முடியாது என்று அவர் சவால் விடுத்தார். 50 ஆண்டுகாலம் அதிமுக-வில் இருந்தவர், தற்போது மாற்றுப் பாதைக்குச் சென்றிருப்பது அவரது அரசியல் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்றும் கே.கே. செல்வம் காட்டமாகத் தெரிவித்தார்.
