உத்தரப் பிரதேசத்தில் சாலை விரிவாக்க திட்டத்தின் பேரில், இந்தியாவுக்கு ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி வீரர் முகமது ஷாஹித்தின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்ற முகமது ஷாஹித், பத்மஸ்ரீ விருதைப் பெற்ற பெருமை வாய்ந்தவர்.

2016-ல் அவர் மரணமடைந்த நிலையில், அவரது மூதாதையர் வீடு கராச்சி-சந்தாஹா சாலையில் இருந்தது. தற்போது அந்த வீட்டின் ஒரு பகுதியை அரசு திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாநில அரசின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், “பத்மஸ்ரீ பெற்ற ஹாக்கி வீரரின் வீடு இடிக்கப்பட்டது வெறும் ஒரு வீடு மட்டும் அல்ல.

அது இந்தியாவின் விளையாட்டு வரலாற்றுக்கு ஒரு நினைவுச் சின்னமாக இருந்தது. பாஜக அரசை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்,” என்று கண்டனம் தெரிவித்தார். ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத், “பாஜக புல்டோசர் அரசுக்கு, நாட்டுக்காக பதக்கம் வென்ற வீரர்களுக்கே மரியாதை இல்லை என்றால், பொதுமக்களுக்கு எப்படி இருக்கப்போகிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.