சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், கருவை கலைக்க வற்புறுத்திய காதலனை 16 வயது மைனர் பெண் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சதாம், சத்தீஸ்கரின் அபன்பூர் பகுதியில் எம்எஸ் என்ஜினீயரிங் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் கடந்த சில மாதங்களாக அவருக்கு தொடர்பு இருந்துள்ளது. இதன் காரணமாக, அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 28-ம் தேதி, இருவரும் ராய்ப்பூர் நகரிலுள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளனர். அங்கு, காதலன் சதாம் – கருவை கலைக்குமாறு சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே, அவர் கத்தியை காட்டி மிரட்டியதும் தெரியவந்துள்ளது.
அதையடுத்து இருவரும் தூங்க சென்ற நிலையில், ஆத்திரம் அடைந்த அந்த சிறுமி, சதாம் மிரட்டிய அதே கத்தியை எடுத்துக்கொண்டு, அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், செல்போனை எடுத்துக்கொண்டு, லாட்ஜ் கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, ரெயில்வே நிலையம் நோக்கி சென்றார். அங்கு லாட்ஜ் சாவியை தூக்கி எறிந்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார்.
வீட்டிற்கு சென்ற பின், தாய் விசாரித்த போது, நடந்த சம்பவத்தை முழுமையாக தெரிவித்துள்ளர். அதையடுத்து, தாய் தனது மகளை நேரிலேயே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, போலீசாரிடம் ஒப்படைத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. காதலன் சதாம் திருமணம் செய்ய மறுத்து, கருவை கலைக்க வற்புறுத்தியதே இந்த வெறிச்செயலுக்கு காரணமாக கூறப்படுகிறது.
மேலும் இந்த கொலைச் சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சமூக வலைதளங்களில் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
