பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவருமான விஜய் குமார் மல்ஹோத்ரா (வயது 94) காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வெடுத்திருந்தாலும், அவருடைய செம்மையான கட்டுப்பாடு மற்றும் நம்பிக்கைக்குரிய அரசியல் அவர் மறைந்தும் பேசப்படும்.
டெல்லி பாஜகவின் முதல் தலைவராக இருந்த மல்ஹோத்ரா, 5 முறை மக்களவை எம்பியாகவும், 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பதவியேற்றுள்ளார். தன்னை அரசியல் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு நேர்மையான, உறுதியான தலைவராக வெளிப்படுத்தியவர். டெல்லி அரசியலில் தவிர்க்க முடியாத நபராக இருந்த அவருடைய பங்களிப்பு மறக்க முடியாதது. இன்று அவரது உடல் டெல்லி ராக்பஞ் சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.
மல்ஹோத்ராவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். “மக்கள் பிரச்சினைகளை நன்கு அறிந்த தலைவராக மல்ஹோத்ரா இருந்தார். டெல்லி பாஜக வளர்ச்சிக்கு அவர் செய்த சேவை அளவிட முடியாதது,” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அவரது மறைவு, நாட்டிற்கு, கட்சிக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.
