தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தெத்துபள்ளம் கிராமத்தில் கூலித்தொழிலாளியான ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், முள்ளாபுதூர் கிராமத்தில் வசிக்கும் சௌந்தர்யா(19) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. தற்போது சௌந்தர்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனவேதனையில் இருந்த சௌந்தர்யா நேற்று காலை ஆனந்தன் கூலி வேலைக்கு சென்ற பிறகு வீட்டின் பின்புறம் இருக்கும் புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சௌந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.