பாகிஸ்தானின் கூட்டாட்சி உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியின் மகிழுந்தை, இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் வைத்து திங்கட்கிழமை காவல்துறையினர் சோதனையிட்ட சம்பவம் அவருக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு வெளியே நக்வியின் காரை லண்டன் காவல்துறையினர் தீவிரமாகச் சோதனையிடும் காணொலி இணையத்தில் வெளியாகிப் பரபரப்பானது.
🚨#BREAKING Interior Minister Mohsin Naqvi arrives at UK Foreign Office to meet British officials.
According to sources, he will hold discussions regarding the extradition of Shahzad Akbar and Adil Raja to Pakistan. pic.twitter.com/JlbvwBwVyP— Saeed Yousafzai (@KPAgainstWar) December 8, 2025
வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் உட்பட ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்கள் காரில் உள்ளதா எனச் சோதனையிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அத்துடன், காவல்துறை அதிகாரிகள் பாகிஸ்தான் அமைச்சரை மரியாதையின்றி நடத்தியதாகவும் செய்திகள் தெரிவித்தன. முன்னாள் சிறப்பு உதவியாளர் ஷேசாத் அக்பர் மற்றும் யூடியூபர் ஆதில் ராஜா உள்ளிட்ட சிலரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தவே நக்வி லண்டன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து லண்டன் அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் சயீத் யூசுப்ஸாய், தன் ‘எக்ஸ்’ தளத்தில், “பிரிட்டிஷ் அதிகாரிகளைச் சந்திக்க வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு மொஹ்சின் நக்வி வந்துள்ளார்.
ஷேசாத் அக்பர் மற்றும் ஆதில் ராஜாவை நாடு கடத்துவது குறித்து அவர் விவாதிப்பார் எனத் தெரிகிறது” என்று பதிவிட்டிருந்தார். எனினும், இந்தக் கார் சோதனையின் காரணமாக இணையப் பயனர்கள் பலர் நக்வியையும், பாகிஸ்தான் அதிகாரிகளையும் கேலி செய்து கருத்துத் தெரிவித்தனர்.
மேலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் உள்ள நக்வி, 2025 ஆசியக் கோப்பையின் கோப்பையை இன்னும் இந்திய அணியிடம் ஒப்படைக்கவில்லை என்பதால், அவர் கோப்பையைத் திருடிச் சென்றுவிட்டாரோ என எக்ஸ் தளத்தில் சிலர் நகைச்சுவையாகவும் கருத்துத் தெரிவித்தனர்.
