சீனாவில் உள்ள ஒரு மீன்வளத்தில், பொதுவிடத்தில் சிகரெட் புகைத்த மனிதருக்கு பெலுகா திமிங்கலம் தண்ணீர் தெளித்து ‘உடனடி கர்மா’ கொடுத்ததாக சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், இந்த வீடியோ தற்செயலாக நடந்தது அல்ல, முன்கூட்டியே திட்டமிட்ட ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட காட்சியென மீன்வள நிர்வாகம் விளக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவில், “புகைபிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதி” என விளக்கப்பட்ட இடத்தில் திமிங்கலத் தொட்டியின் அருகே நின்று சிகரெட் புகைக்கும் ஒருவரைக் காணலாம். அப்போது, தொட்டிக்குள் இருந்த பெலுகா திமிங்கலம் திடீரென மேல் வந்து, அந்த மனிதன் மீது தண்ணீர் பீச்சி சிகரெட்டை அணைக்கும் காட்சி பலரை ஆச்சரியப்பட வைத்தது. ஒரே ஷாட்டில் துல்லியமாக சிகரெட்டை அணைத்த திமிங்கலத்தின் செயலை, இணைய பயனர்கள் “சரியான பதில்” மற்றும் “உடனடி கர்மா” என பாராட்டினர்.
At Dalian Ocean World大连圣亚海洋世界, a man ignored staff warnings and kept smoking.
Right then, a beluga whale from behind sprayed a water jet—bullseye!—putting out his cigarette in the coolest way possible. pic.twitter.com/0RC1rsE8Bk— China in Pictures (@tongbingxue) December 7, 2025
ஆனால், இந்த வீடியோ குறித்து பீஜிங் நியூஸ் வெளியிட்ட செய்தியில், இது பொதுமக்களுக்குள் தீ பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட காட்சியென மீன்வள நிர்வாகம் ஒப்புக்கொண்டது. சிகரெட் பிடித்த நபர் உண்மையில் மீன்வள ஊழியர் என்றும், திமிங்கலத்திற்கு இவ்வாறு தண்ணீர் தெளிக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வீடியோ வடிவமைக்கப்பட்டதுதான் எனினும், பொதுவிடங்களில் புகைபிடிப்பது குறித்து வலுவான மற்றும் தெளிவான செய்தியை இது பரப்பியிருக்கிறது. மேலும் “மீன்வளம் அல்லது மிருகக்காட்சிசாலைக்கு செல்லும்போது விதிகளை மதிக்க வேண்டும்” என்ற எச்சரிக்கையும் இதில் மறைமுகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
