ஹைதராபாத் அருகே உள்ள கொள்ளூர் பகுதியில், 22 வயது மதிக்கத்தக்க சகினா பேகம் என்ற இளம்பெண் தனது நண்பர் அலியுடன் காலியாக இருந்த தனது தந்தைக்குச் சொந்தமான பிளாட்டில் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அவரது தந்தை அந்த பிளாட்டிற்கு வந்துள்ளார். கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததால், தந்தை கதவைத் திறக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த காதலர்கள் இருவரும், தந்தை கண்ணில் படாமல் தப்பிக்கத் திட்டமிட்டனர்.

மாற்று வழி இல்லாததால், 8-வது மாடி பால்கனி வழியாக 7-வது மாடிக்கு இறங்கித் தப்பிக்க அவர்கள் முயன்றனர். அலி அந்தப் பெண்ணின் கையை இறுகப் பிடித்துக் கொள்ள, சகினா கீழே இறங்க முயன்றார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக கையில் இருந்து பிடி நழுவியதால், எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த சகினா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சகினாவின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாகக் கூறி, அவரது நண்பர் அலி மீது கொலைக் குற்றமாகாத மரணம் விளைவித்தல் (Culpable Homicide) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.