கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தந்தார். அவரது இந்தப் பயணத்தின் போது கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி மட்டும் பெரும் குழப்பத்துடன் முடிவடைந்தது.

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது கூட்டக் கட்டுப்பாடு முற்றிலும் சீர்குலைந்தது. இதையடுத்து மேற்கு வங்க அரசு இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சத்ரு தத்தாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணையில் சத்ரு தத்தா கூறியதாவது: “நிகழ்ச்சிக்காக மொத்தம் 150 பேருக்கு மட்டுமே கிரவுண்ட் பாஸ் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் வந்த பிறகு பாஸ்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. இதனால் பலர் மைதானத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் மெஸ்ஸியை பின்னால் இருந்து தொட்டதும், திடீரென கட்டியணைத்ததும் அவருக்கு பெரும் அசவுகரியத்தை ஏற்படுத்தியது. மெஸ்ஸிக்கு இப்படியான திடீர் உடல் தொடர்பு பிடிக்காது என்பதை அவரது பாதுகாப்பு அதிகாரி முன்கூட்டியே எச்சரித்திருந்தார். இருப்பினும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதன் காரணமாகவே அவர் நிகழ்ச்சியை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்றார்” என்றார்.

நிகழ்ச்சியின் போது மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ், மெஸ்ஸியுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் போதும் மெஸ்ஸிக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், தனது பதவியின் செல்வாக்கைப் பயன்படுத்தி உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் மெஸ்ஸி அருகே செல்ல அனுமதித்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்ததைத் தொடர்ந்து, அரூப் பிஸ்வாஸ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மெஸ்ஸியை காண சால்ட் லேக் மைதானத்தில் பல ஆயிரம் ரசிகர்கள் டிக்கெட் வாங்கி இருந்தனர். ஆனால், மேடையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பெரும்பாலான ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை. மெஸ்ஸி நிகழ்ச்சியை பாதியிலேயே விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தின் சில பகுதிகளை சேதப்படுத்தினர்.

மெஸ்ஸியின் இந்தியப் பயணத்திற்காக அவருக்கு ₹89 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசுக்கு ₹11 கோடி வரியாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்தப் பயணத்திற்கு மொத்தமாக ₹100 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் தொகை ஸ்பான்சர்களிடமிருந்தும், மேலும் 30 சதவீதம் டிக்கெட் விற்பனை மூலமாகவும் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

கொல்கத்தா நிகழ்வில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உண்மையான பொறுப்பு யார்மீது என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.