மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ரயிலில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 400 பக்தர்கள் பயணித்துள்ளனர். இவர்கள் ரயிலின் இருக்கைகளை கும்பலாக ஆக்கிரமித்து அமர்ந்திருந்ததால், டிக்கெட் எடுத்துப் பயணித்த மற்ற பயணிகள் அமர முடியாமல் அவதிப்பட்டனர். இது குறித்துப் பயணிகள் அளித்த புகாரின் பேரில், டிக்கெட் பரிசோதகர் (TTE) சோதனை மேற்கொண்டார். அப்போது, அந்த 400 பேரில் சுமார் 100 பேரிடம் மட்டுமே முறையான டிக்கெட் இருந்தது தெரியவந்தது.

​இதையடுத்து, டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களில் 80 பேருக்கு தலா 300 ரூபாய் வீதம் மொத்தம் 24,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ஒரு சிலர் மட்டுமே அபராதத்தைச் செலுத்திய நிலையில், மற்றவர்கள் ‘ஜெய்கோ’ (Jaiho) என உரக்க முழக்கமிட்டவாறு ரயிலில் இருந்து இறங்கித் தப்பியோடினர். ரயிலில் டிக்கெட் எடுத்த பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, சட்டப்படி விதிக்கப்பட்ட அபராதத்தையும் செலுத்தாமல் தப்பிச் சென்ற இந்த வடமாநில பக்தர்களின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.