இமாச்சலப் பிரதேசத்தின் கால்காவிலிருந்து சிம்லா செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘டாய் டிரெய்ன்’ ரயிலில், சில சுற்றுலாப் பயணிகள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். சிம்லா ரயில் நிலையத்தில் இறங்கினால் டிக்கெட்டைப் பரிசோதகரிடம் காட்ட வேண்டும், இல்லையெனில் அபராதம் கட்டி அவமானப்பட நேரிடும் என்று அவர்கள் பயந்துள்ளனர். இதனால், ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்பே, தாராதேவி என்ற பகுதிக்கு அருகில் ரயில் மெதுவாகச் சென்றபோது, அவர்கள் ஒவ்வொருவராக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளனர்.

​இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இளைஞர்கள் சிலர் ஓடும் ரயிலில் இருந்து குதிப்பதும், அதில் ஒருவர் நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுவதும் பதிவாகியுள்ளது. அவர் விழுந்த போது எதிரே மற்றொரு ரயில் வந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வெறும் 320 ரூபாய் முதல் 510 ரூபாய் வரையிலான டிக்கெட் கட்டணத்தைச் சேமிக்க நினைத்து, சுற்றுலாப் பயணிகள் தங்களது உயிரையே பணையம் வைத்த இந்தச் செயல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.