உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் ராம்பூர் மணிகரன் அருகே உள்ள லந்தோரா குர்ஜார் கிராமத்தில், குழந்தை வரம் வேண்டி மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு நள்ளிரவில் வயல்வெளிக்குச் சென்ற தலித் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த 35 வயதான சத்னம் என்பவருக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாந்திரீகர், தந்திரப் பூசைகள் செய்தால் குழந்தை பிறக்கும் என்று ஆசை வார்த்தை கூறி சத்னத்தை நம்ப வைத்துள்ளார்.
அந்த நபரின் அறிவுறுத்தலின்படி, கடந்த புதன்கிழமை நள்ளிரவு 2.30 மணியளவில் சத்னம் வயல்வெளிக்குப் பூசை செய்யச் சென்றதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் சத்னம் வீடு திரும்பாததால் தேடிச் சென்ற அவரது குடும்பத்தினர், அவர் வயலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு மீட்டு வீட்டிற்குக் கொண்டு வந்தனர். வீட்டிற்கு வந்ததும் தண்ணீர் குடித்த சிறிது நேரத்திலேயே சத்னம் உயிரிழந்தார்.
இது ஒரு திட்டமிட்ட சதி என்று குற்றம் சாட்டியுள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் பீம் ஆர்மி அமைப்பினர், மாந்திரீகரைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மாந்திரீகம் மற்றும் மூடநம்பிக்கை பெயரில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
