தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துதான். விஜய்யின் அரசியல் வருகையை விமர்சிக்கும் வகையில் அவர் பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி.யும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தனது பாணியிலேயே நிதானமாகப் பதிலளித்த கமல்ஹாசன், “அரசியலில் யார் யாரோ என்னென்னவோ சொல்வார்கள், அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என நயினார் நாகேந்திரனின் கருத்தை ஒரே போடாகப் போட்டுப் புறந்தள்ளினார்.

விஜய்க்கு ஆதரவான தொனியில் கமல் பேசியிருப்பது, வரும் தேர்தலில் தவெக மற்றும் மநீமை ஆகிய கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து உருவாகிறதோ என்ற எதிர்பார்ப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விஜய் மீது தனக்கிருக்கும் பாசத்தை வெளிப்படுத்தி வரும் கமல், தற்போது நயினாரின் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பது தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.