கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சீகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஜான்பாஷா. விவசாயியாக இருக்கும் அவருக்கு அல்பியா (6), ஆஷியா (3) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் அல்பியா தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று பள்ளி முடிந்து மாலை பள்ளி பஸ்சில் திரும்பியபோது, வீட்டின் அருகே பஸ் நின்றது. அப்போது தனது அக்கா அல்பியாவை வரவேற்க ஆவலுடன் ஓடி வந்த சிறுமி ஆஷியா, பஸ்சின் முன்புற சக்கரத்திற்க்கு அருகில் சென்றுள்ளார். அந்த நேரத்தில் இதை கவனிக்காத டிரைவர் பஸ்சை இயக்கியதால், சிறுமி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து, டிரைவரை உடனடியாக கைது செய்யக்கோரி தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். 3 வயது சிறுமியின் உயிரிழப்பு சம்பவம், அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
