கோவை பெரிய கடைவீதியில் அமைந்துள்ள பி1 காவல் நிலையத்தில், நேற்று இரவு 11 மணியளவில் ஒருவர் புகார் அளிக்க வந்திருந்தார். ஆனால், இன்று காலை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) அறையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் காவல் துறையிலும், பொதுமக்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் அறிவொளி ராஜன் (60) என்பதும், அவர் கோவை பேரூரைச் சேர்ந்தவரும், மனநலக் கோளாறு பாதிப்பால் அவதிப்பட்டு வந்தவரும் என்பதும் உறுதி செய்யப்பட்டது. “தன்னை சிலர் துரத்துகிறார்கள்” என்ற எண்ணத்துடன் அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார் என்றும் தெரியவந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். “தற்கொலை செய்துகொண்டது உதவி ஆய்வாளர் அறையில் நடந்தது. அவர் அங்கு தூக்குப்போட்டு உயிரிழந்ததை அந்த அறையை காலை திறந்தபோதுதான் தெரிய வந்தது.

இது ஒரு தற்கொலை சம்பவம் மட்டுமே; லாக்கப் மரணம் அல்ல என்பதை உறுதியாக தெரிவிக்கிறோம். பணியில் இருந்த போலீசாரின் கவனக்குறைவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மேலும், இச்சம்பவம் குறித்து நீதிபதி தலைமையிலான விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும், காவல் துறை சார்பாக உதவி ஆணையர் மேற்பார்வையில் விசாரணை நடைபெறும் எனவும் அவர் கூறினார்.