இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான அஜின்கியா ரஹானே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கவுள்ளது. சர்வதேச அளவில் இந்திய அணிக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த மாத ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்களுக்கு அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அஜின்கியா ரஹானேவுக்கு மாதந்தோறும் ரூ. 70,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று BCCI அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் BCCI தனது ஓய்வூதியத் திட்டத்தில் சில முக்கிய மாற்றங்களைச் செய்து உயர்த்தப்பட்ட தொகையை வழங்கி வருகிறது.
அதன்படி, 25 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 70,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத பேட்டராகவும், கேப்டனாகவும் சிறப்பாகச் செயல்பட்ட அஜின்கியா ரஹானே, பல முக்கிய போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். தற்போது ஓய்வுபெற்றுள்ள அவருக்கு BCCI வழங்கும் இந்த மாத ஓய்வூதியத் திட்டம், முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் சிறந்த முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
