கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூ சித்தாபுதூர் பாரதியார் ரோட்டில் டெய்லி மேக்ஸ் கேப்பிட்டல் என்ற நிதி நிறுவனம் அமைந்துள்ளது. இதன் இயக்குனராக செந்தில்குமார், அவரது மனைவி லலிதா, பங்குதாரர்களாக கோகுல், பாலு, நாகராஜ், ஆனந்தராஜன் ஆகியோர் இருந்தனர். இவர்கள் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி சுமார் 1500-க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்தனர். சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு தொகையாக பெற்றுள்ளனர். ஆனால் கூறியபடி முதலீடையும், வட்டியையும் கொடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்தராஜன், கோகுல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கடந்த 2020-ஆம் ஆண்டு செந்தில்குமார், லலிதா ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் மோசடி செய்த பணத்தில் வீடு உள்ளிட்ட ஏராளமான சொத்துக்களை வாங்கி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட கோகுல் மற்றும் ஆனந்த ராஜன் ஆகிய இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.