மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் வசித்து வரும் 39 வயது திருமணமான பெண் ஒருவரை, அவரது முன்னாள் காதலன் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதுடன், அவரது குடும்பத்தினருக்கு அந்த வீடியோக்களை அனுப்பி அவதூறு பரப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோகேஸ்வரியைச் சேர்ந்த அஸ்லம் ஷேக் என்பவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் கல்லூரி காலத்தில் இருந்தே பழக்கம் இருந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாயின் புற்றுநோய் சிகிச்சைக்கு அஸ்லம் நிதியுதவி செய்தபோது இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பெண் அந்த உறவை முறித்துக்கொள்ள முயன்றபோது, அஸ்லம் ஆபாசப் புகைப்படங்களை கணவருக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டித் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ஜூன் 2025-இல் அஸ்லமின் மிரட்டலுக்குப் பயந்து அந்தப் பெண் சில ஆபாசப் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். ஆனால், அந்தப் புகைப்படங்களை அஸ்லம் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மாமியாருக்கு அனுப்பி, அவரது நடத்தைக் குறித்து அவதூறான கருத்துகளையும் பகிர்ந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்தப் பெண் தனது கணவரிடம் உண்மையைக்கூறி மேக்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் அஸ்லம் ஷேக் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள அஸ்லமைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான இத்தகைய டிஜிட்டல் மிரட்டல்கள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
