மனைவியின் வாட்ஸ்அப் சாட்டில் மெசேஜ்கள் ‘டெலீட்’ (This message was deleted) செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து ஏற்பட்ட சந்தேகத்தால், கணவன் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கோரக்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜுன் என்ற அந்த நபர், தனது மனைவி குஷ்புவிடம் செல்போனை வாங்கிச் சோதித்தபோது, குறிப்பிட்ட ஒரு எண்ணிலிருந்து வந்த மெசேஜ்கள் டெலீட் செய்யப்பட்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தில் அர்ஜுன் தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் மனைவியின் உடலை வீட்டின் பின்புறம் 6 அடி ஆழத்தில் குழிதோண்டிப் புதைத்துள்ளார்.
கொலை செய்த பின் ஒன்றும் தெரியாதது போல நடித்த அர்ஜுன், தனது மனைவி 3,000 ரூபாய் பணத்துடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவிட்டதாக நாடகமாடியுள்ளார்.
தனது மாமியார் வீட்டிற்கே நேரில் சென்று தேடுவது போல நடித்ததுடன், தன் பெற்றோரிடமும் பொய் சொல்லியுள்ளார். ஆனால், வீட்டின் பின்புறம் மண் தோண்டப்பட்டிருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த அர்ஜுனின் தந்தை ஷியாம் நாராயண், தனது மகனின் நடவடிக்கையில் மாற்றமிருப்பதை உணர்ந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
போலீஸார் அர்ஜுனிடம் நடத்திய அதிரடி விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து 4 நாட்களுக்குப் பிறகு குஷ்புவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கைதான அர்ஜுன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
