டெஸ்லா காரின் அதிநவீனத் தொழில்நுட்பம் ஒரு மனிதரின் உயிரைக் காப்பாற்றியுள்ள வியத்தகு சம்பவம், உலக அளவில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த 2025 நவம்பர் 15 அன்று அதிகாலை 3:50 மணியளவில் ஜான் பிராண்ட் (55) என்பவர் தனது புதிய 2026 டெஸ்லா மாடல் ஒய் (Tesla Model Y) காரில் அட்லாண்டாவில் இருந்து பர்மிங்காம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென கடுமையான மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டுள்ளது.
சுயநினைவை இழந்து காரைக் கட்டுப்படுத்த முடியாத இக்கட்டான சூழ்நிலையில், அவர் தனது மகன் ஜாக் பிராண்டிற்குத் தட்டுத்தடுமாறி போன் செய்துள்ளார். அப்போது காரில் ‘புல் செல்ஃப் டிரைவிங்’ (FSD Supervised) வசதி ஆன் செய்யப்பட்டிருந்ததால் கார் சாலையில் சீராகச் சென்று கொண்டிருந்தது.
உடனே அவரது மகன் ஜாக், தனது மொபைல் மூலமாகத் தந்தையின் டெஸ்லா கணக்கில் லாக்-இன் செய்து, கூகுள் மேப்ஸ் உதவியுடன் அருகில் இருந்த ‘டேனர் மருத்துவமனைக்கு’ காரின் பயண வழியைத் தனது மொபைல் ஆப் மூலமாகவே அதிரடியாக மாற்றி அமைத்தார்.
இந்த சிக்னலை உடனடியாகப் பெற்றுக்கொண்ட டெஸ்லா கார், நெடுஞ்சாலையில் இருந்து அடுத்த எக்சிட்டில் தானாகவே திரும்பி, உள்ளூர் சாலைகள் வழியே நேராக மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு (ER) நுழைவாயில் முன்பாகச் சென்று நின்றது.
இதற்கிடையே ஜாக் மருத்துவமனை ஊழியர்களுக்கும் முன்னரே தகவல் கொடுத்திருந்ததால், மருத்துவர்கள் ஜானுக்கு உடனடியாகச் சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினர்.
காரில் இருந்த இந்த ஸ்மார்ட் தொழில்நுட்பமும், மொபைல் ஆப் மூலமாகப் பயண வழியை மாற்றியமைத்த மகனின் சாதுரியமும்தான் தனது தந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்று ஜாக் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ள இந்தச் சம்பவம், கார் என்பது வெறும் வாகனம் மட்டுமல்ல, அவசரக் காலத்தில் உயிரைக் காக்கும் உற்ற நண்பன் என்பதையும் நிரூபித்து தற்போது சோசியல் மீடியாவில் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.
