திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் இருந்து நாகைக்கு 260 கிலோ குட்கா   பொருட்கள் காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் மதிப்பு  ரூ.3 லட்சம்  இருக்கும். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் திருவாரூர் நாகை பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக மூட்டையுடன் வந்த ஒரு காரை மறித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் இருந்த மூட்டைகளை சோதனை செய்ததில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 260 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நீடாமங்கலம் சித்தமல்லி பகுதியை சேர்ந்த கந்தசாமியின் மகன் முனியப்பன் (37) என்பது தெரியவந்தது. மேலும் அவர் நீடாமங்கலத்தில் இருந்து நாகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விற்பனை செய்யும் நோக்கில், குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்தது கண்டறியபட்டது.

எனவே இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காருடன், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.  மேலும் போலீசார்  முனியப்பனை கைது செய்து, குட்கா பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்றும் எங்கெல்லாம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும்  விசாரணை நடத்தி வருகின்றனர்.