தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி, வளப்பக்குடி, நடுக்காவேரி, நடுப்படுகை, திருப்பூந்துருத்தி, ஈச்சங்குடி, மேல உத்தம நல்லூர், உப்பு காய்ச்சி பேட்டை போன்ற ஊர்களில் 1000 ஏக்கரில் பூவன் வாழை பயிரிடப்படுகிறது. கடந்த ஆண்டு தொடர் மழை பெய்ததின் காரணமாக வாழை இலையின் விளைச்சல் குறைந்து விட்டதாகவும் விலையும் அந்த அளவுக்கு லாபகரமானதாக இல்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழை இலை அறுவடையானது தீவிரமாக நடைபெறுகிறது.
பொது மக்களிடம் வாழை இலையின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் பிளாஸ்டிக் இலை மற்றும் பிளாஸ்டிக் பை போன்றவை முழுவதுமாக தடை செய்ய உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கிறார்கள். இது குறித்து திருவையாறு சேர்ந்த விவசாயி பாஸ்கர் என்பவர் கூறியுள்ளதாவது, வாழை இலை மருத்துவ குணம் உடையதால் அதில் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது. மேலும் இலை அறுவடைக்காக காவிரி ஆற்றின் படுகை பகுதி கிராமங்களில் பூவன் வாழையை பெரும் அளவு பயிரிட்டுள்ளோம்.
இதனையடுத்து இலைகளை நுனி இலை, சாப்பாட்டு இலை, டிபன் இலை என தரம் பிரித்து கட்டுகளாக கட்டி விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம். இந்த இலைகளை எங்களிடம் வாங்கும் வியாபாரிகள் சென்னை, காஞ்சிபுரம், கோவை, காரைக்குடி, ஊட்டி, கரூர், திருப்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் 1 ஏக்கர் வாழையை பயிரிட ரூ.1½ லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவு செய்யும் நிலை உள்ளது. மேலும் விவசாயிகளிடமிருந்து 1 ரூபாய் 70 பைசாவுக்கு நுனி இலையையும், 1 ரூபாய் 40 பைசாவுக்கு சாப்பாட்டு இலையையும், 60 பைசாவுக்கு டிபன் இலையையும் வாங்குகின்றனர். இந்த விலை இழப்பு எங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றது என அவர் கூறியுள்ளார்.