இயக்குனர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் உருவான பறந்து போ திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி மற்றும் அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் படத்தில் பங்குபெற்ற அனைவரும் கலந்து கொண்டனர். படத்தின் பாடலாசிரியரான மதன் கார்க்கி விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, ராம் சாருக்கு நான் என்னுடைய நன்றிகளை சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த படத்தின் மூலம் ராம் நிறைய விஷயங்களை கூறியிருக்கிறார்.

இந்த படத்தை முன்பு சிறிய சிறிய காட்சிகளாக பார்த்த போது எனக்கு ஒன்றும் புரியவில்லை. தற்போது அனைத்தையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது படம் மிகச் சிறப்பாக உள்ளது என கூறினார். மேலும் மறைந்த பாடலாசிரியர் முத்துக்குமார் அவர்களை பற்றி மதன் கார்க்கி பேசிய அவர் தற்போது முத்துக்குமார் சார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த படத்திற்கு நான் பாடல் எழுதி இருக்க மாட்டேன்.

ஏனென்றால் இயக்குனர் ராம் மற்றும் பாடலாசிரியர் முத்துக்குமார் இருவரின் நட்பு மிகவும் ஆழமானது. ராம் சாரின் இந்த படம் வெற்றி பெறுவதில் பாடலாசிரியர் முத்துக்குமார் அவர்களுக்கும் நிறைய பங்கு இருக்கிறது. இந்த நேரத்தில் நான் அவர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் என மதன் கார்க்கி கூறினார்.

இதனைத் தொடர்ந்து படத்தின் நடிகர் சிவா பேசிய போது இது போன்ற ஜாலியான திரைப்படங்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது திரைக்கு வர வேண்டும். எனவே இது போன்ற படங்களை ராம் சார் இயக்க வேண்டும் என நடிகர் சிவா கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் நடித்தபோது மலை ஏறியது, வெயில் என்று கூட பாராமல் அலைந்தது எல்லாம் தாண்டி மக்களாகிய நீங்கள் இந்த படத்தை ரசித்துப் பார்த்தது தான் எனக்கு மகிழ்ச்சி.

இயக்குனர் ராம் பற்றி பேசிய நடிகர் சிவா, ராம் சார் எவ்வளவு நல்ல குணம் கொண்ட மனிதர் தெரியுமா? இந்த படத்தில் பணி புரிந்த அவரின் உதவி இயக்குனர் ஒருவரின் பெயரைத்தான் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பெயராக வைத்தார் என இயக்குனர் ராமின் நல்ல குணத்தை பற்றி பேசி உள்ளார்.