பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் மாம்பழ ஜூஸ்களை விரும்பி அருந்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், மருத்துவர் ஐசக் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியூட்டும் விழிப்புணர்வு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், வணிக ரீதியாக மாம்பழ ஜூஸ் தயாரிப்பதற்கு முதலில் தண்ணீரில் சாயப்பொடி மற்றும் சாய திரவத்தைக் கலந்து, பின்னர் நறுமணத்திற்காகவும், நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காகவும் பல்வேறு பிரசர்வேட்டிவ்களைச் சேர்க்கின்றனர்.

அதன் பிறகு, வெறும் ஒரு வாளி அளவிலான மாம்பழச் சாற்றுடன், சுமார் 50 கிலோ அளவில் சர்க்கரையை அள்ளிக் கொட்டுகின்றனர். மொத்தத்தில், நாம் குடிக்கும் பாட்டில் ஜூஸ்களில் இயற்கையான மாம்பழம் என்பது வெறும் 15 சதவீதம் மட்டுமே உள்ளதாக அந்த மருத்துவர் அதிர்ச்சித் தகவலை உடைத்துள்ளார்.

​மீதமுள்ளவை அனைத்தும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பிரசர்வேட்டிவ்களும், சர்க்கரையும்தான் என்பதால், இதனைத் தொடர்ந்து குடிக்கும் பொதுமக்களுக்கு, குறிப்பாக இளம் வயதிலேயே சர்க்கரை வியாதி, சருமப் பிரச்சினைகள், பல் வலி, உடல் பருமன் மற்றும் கல்லீரல் வீக்கம் போன்ற கடுமையான ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

இத்தகைய ஆபத்தான ரசாயனக் கலவைகளைக் காசு கொடுத்துக் குடிப்பதற்குப் பதிலாக, இயற்கையான பழங்களை வாங்கி வீட்டிலேயே வெட்டிச் சாப்பிடலாமே என்று அவர் மக்களுக்கு ஆரோக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் இந்த வீடியோ, பாட்டில் ஜூஸ் பிரியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி பயங்கரமாக வைரலாகி வருகிறது.