நீலகிரி மாவட்டம் தவிட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி மோனிஷா. இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுள்ள நித்திஷ் குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது மோனிஷா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று செந்தில்குமார் தனது மனைவி மோனிஷாவை மருத்துவ பரிசோதனைக்காக காரில் அழைத்து சென்றுள்ளார்.
பரிசோதனை முடிந்து அதே காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் இருந்த நாவல் மரத்தில் கொத்துக்கொத்தாக நாவல் பழங்கள் இருப்பதை பார்த்ததும் செந்தில்குமார் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி மரத்தில் ஏறி பழங்களை பறித்துள்ளார்.
அப்போது திடீரென நிலைதடுமாறி செந்தில்குமார் கீழே இருந்த பாறை மீது விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மோனிஷா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் ரத்த வெள்ளத்தில் துடித்த தனது கணவரை மட்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செந்தில்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
