கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், தமிழகத்தை தவிக்கவைத்த அதிர்ச்சியான நிகழ்வாக அமைந்தது. மக்கள் அதிகமாக திரண்ட நிலையில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து, தமிழகம் மட்டுமில்லாமல் நாடெங்கும் துயரத்தை ஏற்படுத்தியது.

இந்த துயர சம்பவம் நேர்ந்ததையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் ஆறுதல் கூறினர். இது குறித்து தமிழக வெற்றிக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் “எக்ஸ்” தளத்தில் பதிவிட்டுள்ளார். “வேதனையில் இருந்து மீள முடியவில்லை… முடியாது போலவே தோன்றுகிறது. உறவுகளை இழந்தவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கவே அமைதியாக இருக்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், விபத்துக்குப் பிறகு சமூக ஊடகங்களில் பரவிய அரசியல் குற்றச்சாட்டுகள், அவதூறு செய்திகள் குறித்து கூறிய அவர், “இந்த அமைதியை தவறாக பயன்படுத்தி என்மீது பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். நியாயம் நிலைநாட்டும் முயற்சியில் தான் கவனம் செலுத்துவோம்,” என தெரிவித்துள்ளார்.

முற்றிலும் மனமுடைந்த நிலையில், “41 உயிர்களுக்கு உண்மையான அஞ்சலியாக அவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க பட வேண்டும். பாதிக்கப்பட்டோருடன் வாழ்நாள் முழுக்க பயணிக்க வேண்டியது எனது கடமை” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். தற்போது, விபத்து தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போலீசார் மற்றும் விசாரணை குழு விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.