மத்தியபிரதேசம் சட்னா மாவட்டத்தில் உள்ள சிவில் லைன் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (21) என்பவர் பள்ளி மாணவிகளை தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து மாணவிகளை அவரவர் வீடுகளில் இறக்கிவிட்ட ராஜ்குமார், இறுதியாக இருந்த 4 வயது சிறுமியை மட்டும் வீட்டிற்கு அழைத்து செல்லாமல், ஆள்நடமாட்டமற்ற ஒரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பின்னர் மீண்டும் அவரது வீட்டின் வாசலில் இறக்கிவிட்டுள்ளார். சிறுமி வீட்டிற்கு சென்றதும் உடல்நலக்குறைவால் சிரமப்பட்டதைக் கண்ட பெற்றோர் காரணம் கேட்டபோது, ராஜ்குமார் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக சிறுமி கூறியதும் அவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். உடனடியாக அவர்கள் சட்னா போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளி ராஜ்குமாரை கைது செய்தனர். பாக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது காவலில் உள்ளார்.