கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே உள்ள கொன்னம்தடி பகுதியை சேர்ந்த 28 வயதான சிவலோஷ், தொடுபுழா அருகே வாழைக்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஓட்டல் மேலாண்மை படித்து வந்துள்ளார். அவருடைய குடும்பத்தினர் வாழைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து இருந்தனர்.
அதே பகுதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்த 20 வயதான மீனாட்சி என்பவரும் அடிக்கடி அங்கு வந்து இருந்ததாக கூறப்படுகிறது. கல்வி வாயிலாக ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, இருவரும் தொடர்ந்து காதலிலும் உறவிலும் இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சிவலோசின் பெற்றோர் வெளியூருக்கு சென்றிருந்த நிலையில், அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த வேளையில் அவரது நண்பர் ஒருவர் பலமுறை அழைத்தும், சிவலோஷ் பதிலளிக்கவில்லை. சந்தேகம் கொண்ட அவர் நேரில் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்திருந்தது.
இதனால் உள்ளே சென்று பார்த்த போது, ஒரு அறையில் சிவலோஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதே நேரத்தில் மற்றொரு அறையில் மீனாட்சி துணியால் கழுத்து நெரித்த நிலையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
தகவலறிந்த போலீசார் வந்து நடத்திய விசாரணையில், இருவரும் அந்த நாளில் தனிமையில் பேசிக்கொண்டிருக்கும்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கோபத்தில் சிவலோஷ், மீனாட்சியை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
