தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூரில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியபோது கூறியதாவது, “தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் சமயங்களில் நான் அனைத்து இடங்களுக்கும் சென்றுள்ளேன்.
அப்போது ஒவ்வொரு பகுதியிலும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் இளைஞர்கள் போதையில் தள்ளாடுவதை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. இன்றைய தலைமுறையினர் இப்படி செல்கின்றனரே..! கண் முன்னே நமது குழந்தைகளின் எதிர்காலம் பறிபோகிறதே என மனசெல்லாம் வலிக்கும்.
இன்றைய தலைமுறை குடிக்கு அடிமையாக உள்ளனர். அதையும் விட மோசம் போதைக்கு அடிமையாகின்றனர். மது அருந்தினால் கூட கண்டுபிடித்து விடலாம். ஆனால் போதையில் இருக்கும் இளைஞர்களை கண்டுபிடிக்கவே முடியவில்லை. இன்றைய சமூகத்தில் நமது குழந்தைகளை மிகவும் கவனிக்க வேண்டி உள்ளது.
அவர்கள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள், யாருடன் வீட்டிற்கு வருகிறார்கள், எப்போது வருகிறார்கள், சமூக வலைதளங்களில் என்ன செய்கிறார்கள்? என அனைத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம். வீட்டிலும் பெண்களுக்கு விதிக்கக் கூடிய கட்டுப்பாட்டை ஆண் பிள்ளைகளுக்கும் விதியுங்கள்.
வீட்டிற்கு ஆறு மணிக்கு மகள் வரணும் என்ற கட்டுப்பாடு இருந்தால், மகனும் அதே மாதிரி ஆறு மணிக்கு வீட்டிற்கு வரவேண்டும். ஆண் பெண் இரு பிள்ளைகளையும் ஒரே கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும். வீட்டில் உள்ள வேலைகள் சமையல், வேலைகள் ஆகியவற்றை ஆண் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும் என கூறினார்.
