குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள ஒரு முக்கியச் சாலை சந்திப்பில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிய விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினம் காலை 12.16 மணியளவில் ஜீப்ரா கிராசிங் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் வலதுபுறமாகத் திரும்ப முயன்றபோது, எதிரே மின்னல் வேகத்தில் வந்த கருப்பு நிற ஹூண்டாய் கார் அவர்கள் மீது பலமாக மோதியது.

 

இந்த விபத்தின் தாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த இருவரும் பல அடி உயரத்திற்குத் தூக்கி வீசப்பட்டதோடு, சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு பாதசாரியும் காயமடைந்தார். அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிப் பார்ப்போரை உறைய வைத்துள்ளது. சாலை விதிகளை முறையாகப் பின்பற்றாமல் கவனக்குறைவாகத் திரும்பியதும், காரின் அதிவேகமுமே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.