தமிழகத்தில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு சுமார் 1.31 கோடி பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கப்படும் இந்த உரிமைத் தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்குவோம் என விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.
தற்போது தவெக ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த வாக்குறுதி எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு தமிழகப் பெண்கள் மத்தியில் பெரிதும் எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், பட்ஜெட் தாக்கல் குறித்துத் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரிய வில்சன் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தவெக அரசின் முதல் பட்ஜெட் வரும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும், அமைச்சரவைக் கூட்டங்கள் சுமூகமாக முடிந்துள்ள நிலையில், மக்கள் தற்போதைய ஆட்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் மரிய வில்சனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வரவிருக்கும் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகைக்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியின்படி உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு, ஆகஸ்ட் மாத பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்தச் செய்தியால் குடும்பத் தலைவிகள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
