கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு நவீன ஆலையின் தற்போதைய நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அமைச்சர் வெங்கடரமணன் நேரில் சென்றிருந்தார். இந்த ஆய்வின் போது, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர்.
ஆலையின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களை அமைச்சர் பார்வையிட்ட போது, கட்டடத்தின் பிரதான வாசலில் முறையான படிக்கட்டுகள் அமைக்கப்படாமல், பல அடி உயரத்திற்கு வெறும் கான்கிரீட் தளம் மட்டுமே இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
படிக்கட்டுகள் இல்லாத காரணத்தால், கட்டடத்தின் உள்ளே சென்றுவிட்டுத் திரும்புகையில் வேறு வழியின்றி அமைச்சர் அந்த உயரமான மேடையிலிருந்து சிரமத்துடன் தாவி கீழே இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அரசுக்குச் சொந்தமான ஒரு நவீன கட்டடத்தில், அடிப்படை கட்டமைப்பான படிக்கட்டுகள் கூட இல்லாமல் எவ்வாறு பணிகள் நடைபெறுகின்றன? என அமைச்சர் கடும் அதிருப்தி தெரிவித்தார். அலட்சியமாகச் செயல்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து அவர் உடனடியாக விளக்கம் கேட்டார்.
