கேரள மாநிலம் கண்ணூரில் 16 வயது மாணவி ஒருவரை, தனியார் பஸ் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவி, 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு தனியார் பஸ்சில் சென்று வந்த மாணவிக்கு, அதே பஸ்சின் டிரைவரான தீபின் என்பவர் அறிமுகமானார்.

பின்னர், அவர் மாணவியுடன் தொடர்ந்து பேசி பழகியதுடன், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கும் மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதனை வெளியில் கூறாமல் இருப்பதற்காக, மாணவிக்கு விலையுயர்ந்த செல்போனை வாங்கி கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த செல்போனை மாணவி ரகசியமாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், மாணவியின் வீட்டார் புதிய செல்போனைப் பார்த்து விசாரித்தபோது, அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பஸ் டிரைவர் தீபினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அவர் பயன்படுத்திய செல்போன் வழியாக வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.