சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொலியில், இஸ்லாமிய நபர் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று கூறுமாறு கூறி, அதற்காக நான்காயிரம் யூரோக்களை (சுமார் 3.6 லட்சம் ரூபாய்) வழங்க முன்வந்ததும், அதற்கு அந்த நபர் அளித்த பதிலடியும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் ஒருவரை அணுகி இஸ்லாமிய முறைப்படி வாழ்த்துக் கூறி, அதேபோலத் தன்னை வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அந்த நபர் அதனை ஏற்க மறுத்ததோடு, தன்னிடம் இருந்த பெரும் தொகையைக் காட்டி ஆசை காட்டியும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். மேலும், “உன்னுடைய நாட்டிற்கே திரும்பிப் போ” என்று அவர் அந்த நபரைப் பார்த்துக் கூறியது அங்கிருந்தவர்களையும், இணையவாசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இஸ்லாமியர்களின் பாரம்பரிய வாழ்த்து முறையான ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதற்குப் பதிலாகப் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் காட்டிய இந்த எதிர்ப்பு, இணையத்தில் இருவேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர் அந்த நபர் தனது கொள்கையிலும் கலாச்சாரத்திலும் உறுதியாக இருந்ததைப் பாராட்டி வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் இது அப்பட்டமான இனவெறி என்றும், ஒருவரை அன்புடன் வாழ்த்தும் போது அதனை நாகரீகமாக ஏற்கத் தவறியது கண்டிக்கத்தக்கது என்றும் கூறி வருகின்றனர்.

அதே சமயம், கையில் கட்டுக்கட்டாகப் பணத்தை வைத்திருந்த விதம் மற்றும் அந்தச் சூழல் ஆகியவற்றைக் கவனித்த சிலர், இது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நாடகமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.