விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது ஏற்படும் வெடிவிபத்துகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ‘கிருஷ்ணா பட்டாசு ஆலையில்’ இன்று எதிர்பாராதவிதமாகப் பயங்கர வெடிவிபத்து நேரிட்டுள்ளது.
தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மருந்து உராய்வு காரணமாகவோ அல்லது எதிர்பாராத காரணத்தினாலோ திடீரெனத் தீப்பற்றிப் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இந்த கொடூர விபத்தில், ஆலை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், அங்குப் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நடந்த நமஸ்கரித்தான்பட்டி பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை மூட்டமாகக் காட்சியளிப்பதால், அங்குப் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், புகை மூட்டத்திற்கு இடையே இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பல தொழிலாளர்கள் தீயணைப்பு வீரர்களாலும் அப்பகுதி மக்களாலும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகச் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்திற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
