போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற அரசின் கொள்கைக்கு வலு சேர்க்கும் வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்து எடுத்துள்ள அதிரடி முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மதுப் பழக்கத்தால் சீரழியும் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தைக் காக்கவும், கிராமத்தின் பொது அமைதியைப் பேணவும் இப்பகுதி மக்கள் இணைந்து ஒரு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதாகையை ஊருக்குள் வைத்துள்ளனர். “மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்” என்ற முழக்கத்துடன் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரில் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்த அறிவிப்பின்படி, கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் மற்றும் பொதுச் சுகாதாரத்தைக் கருத்தில்கொண்டு, கடந்த 02.08.2026 முதல் கிராமத்தில் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்துவது உறுதியான ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, திருமணமானவர்கள் கூட குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ தகராறு செய்து கிராமத்திற்குப் பிரச்சினை ஏற்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கும் ரூபாய் 5,000 அபராதம் வசூலிக்கப்படும் என்று கறாராகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்; மதுவைத் தவிர்ப்போம், நம் எதிர்கால வாழ்க்கையையும் சமூகத்தையும் பாதுகாப்போம்” என்ற உன்னத நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அரசின் விழிப்புணர்வு முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் விதமாக, ஒரு கிராமமே ஒன்று சேர்ந்து மதுவுக்கு எதிராக எடுத்துள்ள இந்தச் சுயகட்டுப்பாட்டு நடவடிக்கை தற்போது அப்பகுதி முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், மற்ற ஊர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளது.
